இந்தியா

சாவர்க்கர் குறித்து கருத்து தெரிவித்த ராகுல்...வழக்குப்பதிவு செய்த போலீசார்!

Tamil Selvi Selvakumar

சுதந்திர போராட்ட வீரர் வி.டி.சாவர்க்கர் குறித்து இழிவான முறையில் கருத்துகள் கூறியதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்து தெரிவித்த ராகுல்:

இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நடைப்பயணத்தின் போது, வாசிம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சுதந்திர போராட்ட வீரர் வி.டி.சாவர்க்கர் குறித்து சர்ச்சையான வகையில் பேசியுள்ளார். அதாவது, வி.டி.சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர் என கூறியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார்:

இதன் தொடர்ச்சியாக சிவசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து பேசிய நிர்வாகி, "இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து உள்ளூர் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மண்ணின் மகத்தான மனிதரை இழிவுபடுத்துவதை நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, புகாரின் பேரில், ராகுல் காந்தி மீது தானே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.