இந்தியா

பாஜகவிடமிருந்து சிசோடியாவுக்கு வந்த அழைப்பு....!!!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக வருவதை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன மத்திய அரசு செயல்படுவதாக மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

வலுவாகும் ஆம் ஆத்மி:

பாஜகவை எதிர்க்கும் அளவிற்கு காங்கிரஸ் மாற்று கட்சியாக இல்லாததால் மக்கள் கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பளிக்க நினைக்கின்றனர் என மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.  டெல்லியின் துணை முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மக்கள் கெஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்புவதாக பேசியுள்ளார்.

அனைவருக்கும் நல்ல கல்வி, மருத்துவ வசதி, மலிவான அல்லது இலவச மின்சாரம் ஆம் ஆத்மியால் மட்டுமே வழங்க முடியும் எனவும் சிசோடியா கூறியுள்ளார். 

பிரதமராகும் கெஜ்ரிவால்:

ஆம் அத்மி தலைவருக்கு பிரதமர் பதவி ஆசை உள்ளதா என்ற கேள்விக்கு ”நிச்சயமாக” இருக்கிறது என பதிலளித்துள்ளார் சிசோடியா.

ஆனால் இது ஒரு தனிநபரின் ஆசை மட்டும் அல்ல எனவும் முழு நாட்டின் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.  பாஜக, சிபிஐ, டெல்லியின் துணை நிலை ஆளுநர், டெல்லி தலைமை செயலாளர் அனைவருக்கும் கெஜ்ரிவாலை நிறுத்தும் எண்ணம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

இரு விதமான எண்ணங்கள்:

தற்போது இரு தரப்பில் இருந்து இரண்டு விதமான எண்ணங்கள் உள்ளன எனவும்  ஒரு தரப்பில் அமலாக்கதுறை, சிபிஐ ரெய்டுகள் மூலம் யாரை வீழ்த்தலாம் என்ற சிந்தனையும் மறுபுறம் வலுவான இந்தியாவை எவ்வாறு உருவாக்குவது என்ற சிந்தனை இரவும் பகலுமாக கெஜ்ரிவாலிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார் சிசோடியா.

இந்த வித்தியாசத்தை மக்கள் நிச்சயம் தெளிவாக புரிந்துகொள்வார்கள் என சிசோடியா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

அடுத்துவரும் பொது தேர்தலில் கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் ஆம் ஆத்மியை அணுகுமா என்ற கேள்விக்கு மக்கள் ஒன்றிணையும் போது எந்த கூட்டணியும் செயல்பட முடியாது எனவும் மோடி மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் தற்போது அவர் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என பதிலளித்துள்ளார் சிசோடியா.

குற்றமும் தண்டனையும்:

ஆம் ஆத்மி மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றசாட்டுகளை குறித்து கேள்வியெழுப்பியபோது கட்சியின் உறுப்பினர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டால் அவர்  கட்சியின் தலைவராக இருந்தால் கூட தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்றுவதையே லட்சியமாக கொண்டு ஆம் ஆத்மி செயல்படுவதாக சிசோடியா கூறியுள்ளார்.  பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி விரைவில் பாஜகவின் கோட்டையான குஜராத்தையும் கைப்பற்றும் எனவும் சிசோடியா கூறியுள்ளார்.  மேலும் 2024 பொதுதேர்தலில் மோடிக்கு சவாலும் விடுத்துள்ளார் சிசோடியா.

சிசோடியாவுக்கு வந்த அழைப்பு:

டெல்லியில் தொடர்ந்து அமலாக்கதுறை சிபிஐ ரெய்டுகள் நடந்து வருகின்றன.  வழக்கில் முதல் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ள டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  அவருடைய ட்விட்டர் பதிவில் பாஜக கட்சியிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆம் ஆத்மியை விட்டு பாஜகவில் இணைந்தால் எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளனர் எனவும் சிசோடியாதெரிவித்துள்ளார்.  மேலும் அவர் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர் எனவும் தலையை துண்டித்தாலும் தலை வணங்க மாட்டேன் எனவும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.