இந்தியா

"பாஜகவினர் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்" இராகுல் காந்தி!

Malaimurasu Seithigal TV

மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பாஜகவினர் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள் என்று இராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய் முதல் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்ற தொடங்கினார் வயநாடு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. ஆனால்  தொடக்கத்திலேயே பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, தாம் மணிப்பூர் கலவரம் பற்றி மட்டுமே பேசப் போவதாகவும் அதானி பற்றி பேசப்போவதில்லை என்றும், அதனால் பாஜகவினர் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் கூறினார். 


கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தான் நடைபயணம் மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தமது நடைபயணத்தின்போது ஏழை, கூலி, விவசாய மக்களின் ஒருமித்த குரலின் வழியே உண்மையான இந்தியாவைக் கண்டதாக  கூறினார். மேலும், தமது நடைபயணம் இன்னும் நிறையவடையவில்லை என்றும் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய ராகுல், நாட்டு மக்களுக்காக தான் உயிரை விடவும், சிறைக்குச் செல்லவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மணிப்பூரில் தாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைக் குறிப்பிட்ட அவர், அங்கு முகாமில் தங்கி இருந்த பெண்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய குமுறல்களை கேட்டறிந்ததாகக் தெரிவித்தார். ஆனால், இப்போது வரை பிரதமர் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.


இந்தியாவில் இருந்து மணிப்பூர் தள்ளி இருப்பதாக மத்திய அரசு நினைத்துக் கொண்டிருப்பதாக சாடிய ராகுல்காந்தி, மணிப்பூரில் கொல்லப்பட்டது இந்தியாதான் என்றும், அங்கே நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தப்பட்டது பாரத மாதாதான் என்றும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, ராகுல்காந்தி அவசியமற்ற சொற்களைப் பேசுவதாகக் கூறி மத்திய அமைச்சர் கிரன் ரிஜூஜூ உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.


பாஜகவினரின் எதிர்ப்புக்கு இடையே பேசிய அவர், மத்திய அரசு நினைத்திருந்தால் இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தி மணிப்பூர் கலவரத்தை ஒரே நாளில் அடக்கி இருக்க முடியும் என்றும் தெரிவித்தார், பாஜகவினர் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள் என்றும் காட்டமாக சாடினார். மேலும், தனது ஒரு தாய் இங்கே இருக்கும் நிலையில், மற்றொரு தாயை மணிப்பூரில் கொன்றுவீட்டீர்கள் என்று உருக்கமாக பேசினார். 


ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்ததுபோல் தற்போது மணிப்பூரும் அரியானாவும் பாஜகவின் அகங்காரத்தால் பற்றி எரிகிறது என்று கூறி பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் காட்டமான பேச்சுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, காங்கிரஸ் கட்சியின் குரலை, இந்தியாவின் ஒட்டுமொத்த குரலாக கருத முடியாது என்றார். மேலும், மணிப்பூர் பிளவுபடுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி மக்களிடம் பொய்யுரைத்து வருவதாகவும் புகார் தெரிவித்தார்.