கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழலில் சிக்கிய எம்.எல்.ஏ:
கர்நாடகத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், காங்கிரஸ், பாஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தாவணகெரெ மாவட்டம் சென்னகிரி தொகுதி எம்.எல்,ஏ., மதல் விருபக்சப்பா லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார். அவரது வீட்டில் கட்டுக்கட்டாக சுமார் 6 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்:
கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வை அடுத்து விருபக்சப்பாவை கைது செய்ய வலியுறுத்தியும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலக வலியுறுத்தியும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக பெங்களுருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சித்தராமையா உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட காவிரி பாலம்...!!