இந்தியா

11 பேர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதல்... பிரதமர் மோடி கடும் கண்டனம்!!!

Malaimurasu Seithigal TV

சத்தீஷ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர்.  அப்போது எதிர்பாராத விதமாக வீரர்களை சுற்றி வளைத்த மாவோயிஸ்ட்டுகள், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட ராணுவ வீரர்கள் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலில் அந்த பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது.   தகவல் அறிந்து வந்த துணை ராணுவப் படையினர் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் பலியான நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாவோயிஸ்ட் செயல்பாடுகள் முற்றிலும் ஒடுக்கப்படும் என்றார்.  இந்நிலையில், முதலமைச்சர் பூபேஷ் பாகலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டைக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார்.

இதனிடையே, 11 பேர் உயிரிழப்புக்கு காரணமான மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும், தாக்குதலில் மரணம் அடைந்த துணிச்சலான வீரர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், வீரர்களின் உயிர் தியாகம் என்றும் நினைவு கூறப்படும் என்றும் பிரதமர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.