அவசர சட்டத்திற்கு எதிராக, கடந்த மாதம் 23ம் தேதி நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்கிய கெஜ்ரிவால், இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார்.
சமீபத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே உரிமைகள் உள்ளது எனவும் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநரும் உட்பட்டவர் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, மத்திய அரசு, அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் துணை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கி, அவசர சட்டத்தை கொண்டு வந்தது. மேலும் இதை சட்டமசோதாவாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
மத்திய அரசின் இந்த திட்டத்தை தோற்கடிக்கும் வகையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார். இதனை தொடர்ந்து, அவசர சட்டத்திற்கு எதிராக, கடந்த மாதம் 23ம் தேதி நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில், இன்று (வியாழக்கிழமை), "தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து டெல்லிக்கு எதிரான அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதரவை கோருவதாக" புதன்கிழமை பதிவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று, கெஜ்ரிவால், தமிழக முதல்வரை சந்திக்க உள்ளார். பின்னர், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை, நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.