இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்ற இரு அவைகளும் கூட உள்ள நிலையில் எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே மணிப்பூா் விவகாரம் அவையில் எதிரொலித்தது. மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்ட அதிா்ச்சிகர சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில், அது குறித்து விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
மேலும், மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளில் இரு அவைகளும் முடங்கின. 2-ஆவது நாளிலும் அமளி நீடித்ததால் திங்கட்கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இரு அவைகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.