புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை "ராஷ்டிரபத்னி" என்று கூறி சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்ததால், தனக்கு ஒரு "பாதுகாவலர்" கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சௌத்ரி விளக்கம் :
“ராஷ்டிரபத்னி” என்ற சொல்லை தான் தவறுதலாக பயன்படுத்தியதாக கூறியிருந்தபோதும் ஆளும் கட்சி அதை குழப்பத்தை உருவாக்கவும், விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான கேள்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் பயன்படுத்துகிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் சௌத்ரி.
பெண்கள் மீது தனக்கு அதிக மரியாதை உண்டு எனவும் அவரது கட்சித் தலைவரும் ஒரு பெண்தான் எனவும் சௌத்ரி கூறியுள்ளார். மேலும் யாராக இருந்தாலும், நமது நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருப்பவரை தான் எப்படி அவமதிக்க முடியும்? என்றும் சௌத்ரி கேள்வியெழுப்பியுள்ளார்.
குற்றச்சாட்டு:
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சௌத்ரி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிகொண்டே சென்றார் எனவும் என்று அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது எனவும் கூறினார் சௌத்ரி.
சௌத்ரியின் பாதுகாவலர்:
பின்னர் அவர் சபாநாயகரிடம் சென்றதாகவும் அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கெஞ்சியதாகவும் கூறியுள்ளார். சோனியா காந்தியும் சபாநாயகரிடம் ஆதிருக்கு பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று பேசியதாகவும் சௌத்ரி கூறியுள்ளார்.
சௌத்ரி இந்த பிரச்சினையின் போது அவர் அனாதையாக உணர்ந்ததாகவும் சோனியா காந்தியின் ஆதரவால் அவருக்கு பாதுகாவலர் இருப்பதாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.