இந்தியா

பாஜகவில் இணையும் ஒவ்வொரு எம்.எல்.ஏ வுக்கும் ரூ.20 கோடி…ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

Malaimurasu Seithigal TV

டெல்லியில் மதுபான முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ சோதனைகள் மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேராவிட்டால் சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் பிற பொய் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பாஜக மிரட்டியதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.

ரூபாய் 20 கோடி பேரம்

அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி மற்றும் குல்தீப் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள்  அணுகியுள்ளனர் என அவர் கூறினார்.   அவர்கள் கட்சியில் சேர்ந்தால் தலா ரூ.20 கோடியும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்தால் ரூ.25 கோடியும் வழங்கப்படும் என பாஜக பேரம் நடத்தியதாக சஞ்சய் சிங் கூறினார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுத்து பாஜகவிற்குள் கொண்டு வந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சுமத்தினார் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்.

மணீஷ் சிசோடியாவுக்கு ஏற்பட்ட நிலை

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் தனக்கு பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் ஆக்குவதாக கூறியதாகவும் ஆனால் அவர் அதை மறுத்ததாகவும் கூறினார்.

பாஜகவில் சேர ரூபாய் 20 கோடியும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தன்னுடன் அழைத்து வந்தால் ரூபாய் 25 கோடியும் தருவதாக கூறப்பட்டது என ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ் ஜா கூறினார். தன்னை அணுகிய பாஜக உறுப்பினர், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் சேரவில்லை என்றால், "மணீஷ் சிசோடியாவுக்கு என்ன நடந்ததோ அதுவே மற்ற எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நடக்கும்" என்று கூறியதாக அவர் குற்றம் சாட்டினார்.