குஜராத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னை அவதூறாக பேசியுள்ளார் குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா.
குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னை தவறாக பேசிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதில் மீண்டும் பிரதமர் மோடியை அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்தியதுடன், அவரது தாயார் ஹீராபென்னையும் தவறாக பேசியுள்ளார் இத்தாலியா.
இத்தாலியாவின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் இரானி "அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆசியுடன், குஜராத்தின் ஆம் ஆத்மி கட்சி தலைவர், பிரதமரின் 100 வயது தாயார் மீது தீங்கிழைக்கும் தாக்குதலை நடத்தியுள்ளார். ஹீரா பென் நரேந்திர மோடியைப் பெற்றெடுத்தது குற்றமா? ஆம் ஆத்மியின் தலைவர்களும் தொண்டர்களும் அவரை எப்போதும் தரம் தாழ்த்தவே விரும்புகிறீர்கள்.” என்று கூறியிருந்தார்.
மேலும் ”நான் எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. குஜராத்திகள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதை நான் கூற வேண்டிய தேவையில்லை. ஆனால் பொதுமக்கள் உங்களைக் கவனிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த தவறுக்கு குஜராத்தில் நிச்சயம் உங்கள் கட்சி தோற்றுவிடும், பொதுமக்கள் தண்டனை தருவார்கள்.” என்றும் இரானி தெரிவித்துள்ளார்.
. ஒரு வாரத்தில் இத்தாலியாவின் மூன்றாவது வீடியோ:
ஒரு வாரத்திற்குள், பாஜக இத்தாலியாவின் மூன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஒரு வீடியோவில், கோபால் பிரதமர் மோடியைப் பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, இரண்டாவது வீடியோவில், கோயில்களை சுரண்டலின் குகை என்று கூறி பெண்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று இத்தாலியா அறிவுரை கூறுவது போன்று பேசியிருந்தார். மேலும் பாஜக உங்களை சுற்றி வளைக்க முயற்சிக்கிறது என்றும் கூறியிருந்தார் இத்தாலியா.
பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் ஹீரா பென் ஆகியோரை குறைவான வகையில் பேசியதற்காக குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவருக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. அவரை டெல்லி போலீசார் இரண்டரை மணி நேரம் காவலில் வைத்தனர். அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டியிருந்தார் இத்தாலியா.
பாஜக செய்தி தொடர்பாளரான அமித் மாளவியா, கோபால் இத்தாலியாவின் புதிய வீடியோவைப் பகிரும்போது, "குஜராத்தில், ஆம் ஆத்மி தலைவரும், கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளருமான கோபால் இத்தாலியா ஒன்றன்பின் ஒன்றாக குற்றங்களைச் செய்து வருகிறார்.
பெண்களை 'சி' என்ற வார்த்தையில் பேசியதோடு கோவிலுக்கு செல்வோரையும் இழிவுபடுத்தி வருகிறார். அதனோடு நில்லாமல் பிரதமரின் வயதான தாயாரையும் தற்போது அவதூறாகப் பேசியுள்ளார். இத்தாலியா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் பிரதமர் மோடியை புண்படுத்தும் வகையில் அவரது தாயை ஒரு ’நாடகக்காரர்’ என்று அழைப்பது தெளிவாக கேட்கிறது.” என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி பதில்:
இத்தாலியாவின் இந்த வீடியோக்கள் பழையவை என்றும் அந்த நேரத்தில் இத்தாலியா கட்சியில் இல்லை என்றும் ஆம் ஆத்மி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இத்தாலியாவின் இந்த கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், இத்தாலியாவின் காணொளியை கடுமையாக விமர்சித்தது குஜராத்தின் படேல் சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.