இந்தியா

“தலைவர் என்பவர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும்......” காங்கிரஸ் கண்டனம்!!

Malaimurasu Seithigal TV

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சமீபத்தில் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்வதற்கு முன் மக்கள் தங்கள் அரசியல் கண்ணாடியைக் கழற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்.  இதற்கு காங்கிரஸ் தற்போது பதிலடி கொடுத்துள்ளது. 

ராகுல்  மீது தாக்குதல்:

2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் என்றும், இந்நிலையில் நாட்டின் கண்ணியத்தை தாக்கும் ஒவ்வொரு முயற்சியும் மழுங்கடிக்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார்.  மேலும்  வெளிநாட்டுப் பயணம் செல்லும் யாராக இருந்தாலும் அரசியல் கண்ணாடியைக் கழற்ற வேண்டும் எனவும் இது நாட்டுக்கும் நன்மை பயக்கும், அந்த நபரும் பயனடைவார் எனவும் பேசியிருந்தார்.  குடியரசு துணைத் தலைவரின் இந்த கூற்றுகள் ராகுல் காந்தி மீதான தாக்குதலாகவே பார்க்கப்பட்டது. 

இங்கிலாந்து பயணம்:

கடந்த மாதம், ராகுல் காந்தி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, இங்கிலாந்தில் அவரது கருத்துக்கள் குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்ததையும், அவரது கருத்துக்களுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டிருந்தது . 

காங்கிரஸ் எதிர் தாக்குதல்:

முதலில் 2015ல் இதை ஆரம்பித்தவர்களுக்கு இந்த அறிவுரையை கூறுங்கள் எனவும் அதன் பிறகு இதை மற்றவர்களிடம் சொல்லுங்கள் எனவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனோடு, தலைவர் என்பவர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும் என்றும் எப்போதும் அரசாங்கத்தைப் புகழ்ந்து பேசக்கூடாது எனவும் விமர்சித்துள்ளது.

-நப்பசலையார்