பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வலியுறுத்தியதையடுத்து, ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, 7 வது சர்வதேச யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டம், காலை 6:30 மணி முதல் துார்தர்ஷன் 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் இந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்த உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.