இந்தியா

தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 5 ஜி சேவை..! ஜியோ நிறுவனம் அறிவிப்பு..!

Malaimurasu Seithigal TV

தசரா பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் 4 நகரங்களில் இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

5 ஜி ஏலம்:

இந்திய மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை  5ஜி அலைக்கற்றையை அண்மையில் ஏலம் விட்டது. இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றைகளை  ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் ஏலம் எடுத்தன. 

5 ஜி அறிமுகம்:

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி சேவையை, டெல்லியில் கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை முதலில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

4 நகரங்களில் அறிமுகம்:
 
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

புதிய சிம்?:

சோதனை அடிப்படையில் இந்த 5ஜி சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த சேவையை பெற புதிய சிம் தேவையில்லை என்றும் மக்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் சேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.