கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா இன்று கோலாகலத்துடன் தொடங்குகிறது.
53வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா:
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் இன்று முதல் 28ம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் சிறந்த கதையம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த விழாவில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்களும் இடம் பெறுகின்றன.
மேலும் ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் ஆகிய படங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் திரையிடப்படுகின்றன.
இதனிடையே திரைப்படக்கலை, சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பத்தை பறைசாற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.