திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 38 பேர் பாஜகவுடன் தொடர்பில் நிருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி:
பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா போன்று அரசியல் சூழல் பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்கு வங்காளத்திடம் வந்துள்ளது. மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் திரிணாமூல் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணுவதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
அத்துடன், கட்சியை உடைத்து விடலாம் என பாஜக நினைத்தால் அது எண்ணமாக மட்டுமே இருக்கும் என்றும் விரைவில் உண்மை வெளி வரும் எனவும் மம்தா கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களுள் திருடர்களோ, கொள்ளைக்காரனோ இல்லை என்றுக் கூறிய அவர், அவ்வாறு யாரேனும் இருந்தால் அவர்களை கட்சியில் வைத்திருப்பதில்லை என குறிப்பிட்டார். என் மீது மை வீச முயற்சித்தால் நான் அவர்கள் மீது சகதியை வீசுவேன் என்று மம்தா பானர்ஜி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
மிதுன் சக்கரவர்த்தி:
இதனையடுத்து, மம்தாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் மிதுன் சக்கரவர்த்தியும் வார்த்தைப் போரில் இறங்கியுள்ளார். நீங்கள் பிரேக்கிங் செய்தி கேட்க விரும்புகிறீர்களா? நான் பேசி கொண்டிருக்கும் இந்த வேளையில் 38 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக உடன் நல்ல உறவில் இருப்பதாக கூறியுள்ளார். அவர்களில் 21 பேர் நேரடியாக பாஜக உடன் தொடர்பில் உள்ளதாகவும் மிதுன் சக்கரவர்த்தி பேசியுள்ளது மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் லோட்டஸ்:
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து எடியூரப்பா ஆட்சியைக் கொண்டு வந்ததால் தவறான அரசியல் முன் உதாரணத்தை பாஜக மேற்கொள்வதாக விமர்சிக்கப்பட்டது. அதாவது, தவறான வழியில் குமாரசாமி அரசை பாஜக கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதே வியூகத்தை உத்தவ் தாக்கரே அரசு மீதும் பாஜக கடைபிடித்தது. அதாவது. சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்களை தன் வலைக்குள் வீழ்த்தி மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டது. இந்த பின்னணியில், பாஜக மூத்த தலைவர் மிதுன் சக்கரவர்த்தியின் பேச்சும் தற்போது, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அரசியல் மாற்றத்தை மேற்கு வங்கத்திலும் பாஜக ஏற்படுத்த முயலுகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது