இந்தியா

வடமாநிலங்களில் கனமழை; 34 பேர் உயிரிழப்பு!

Malaimurasu Seithigal TV

வடமாநிலங்களில் கனமழை பாதிப்புகளில் சிக்கி மூன்றே நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால் பல மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை டெல்லியில் அளிக்கப் பட்டுள்ளது. நேற்று மழை பாதிப்பு தொடர்பான அவசரக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், அனைத்து மீட்பு நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

அதேபோல் டேராடூனின் கரோடாவில் இந்து கல்லூரியில் மண்சரிவால் கட்டிடங்கள் பாதிக்கப்பட்ட பரபரப்புக் காட்சிகளும் வெளியானது. குல்லுவின் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்ததோடு, பஞ்சவக்த்ரா கோயில் மற்றும் நடைபாலம் சேதமடைந்தது. மணலியில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழும் காட்சிகளும் வெளியாகின. மண்டியில் வீடுகள், மரங்களை இடித்துத் தள்ளி சாரைப்பாம்பு போல் ஊருக்குள் நுழைந்த காட்டாற்று வெள்ளம், காண்போரை கதிகலங்கச் செய்தது.

இதனால் இமாசலப்பிரதேசத்தில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட்அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வலியுறுத்தியுள்ளார். 

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் நர்மதா ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹரியானாவின் கர்னாலில் யமுனை ஆற்றின் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததை அடுத்து, படகுகளில் சென்று மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரேநாளில் மழைபாதிப்புகளில் சிக்கி 34 பேர் உயிரிழந்த நிலையில், அவர்தம் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.