இந்தியா

கர்நாடகா: பாஜகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதி என்ன?

Tamil Selvi Selvakumar

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் 52 புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். 

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.  இதனால், தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், கர்நாடகாவில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கர்நாடக பாஜக கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.  

இதில் பல சிட்டிங் எம்.எல்.ஏ.-க்களுக்கு இந்த பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் 52 புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட உள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகரிபுரா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 166 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டு அங்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.