செய்தி

"விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவேற்றிய திட்டங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவேற்றியுள்ள திட்டங்களை விவரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் விக்கிரவாண்டியில் 328 மாணவர்கள், 83 தன்னார்வலர்கள் மூலம் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 43 ஆயிரம் முதியவர்களுக்கு

மாத ஓய்வூதியம் 314 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டியில் 3 கோடியே 89 லட்சம் முறை மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் 53 ஆயிரத்து 375 பேர் மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 488 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 1987ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21

சமூக நீதி போராளிகளுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அண்ணா, கலைஞர் அமைச்சரவையில் வேளாண்த்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய கோவிந்தசாமிக்கு சிலையுடன் கூடிய அரங்கம் ஒன்றை வழுதரெட்டி கிராமத்தில் 4 கோடியில் அமைக்கப்படுகிறது என பட்டியலிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டியில் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 21 ஆயிரத்து 93 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.