மற்றவை

18-ல் கூடும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்! முக்கிய அம்சங்கள் (ம) தாக்கலாகும் மசோதாக்கள் என்ன?

Tamil Selvi Selvakumar

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் கூடுகிறது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்புக்கூட்டத்தொடர் 22ம் தேதி நிறைவடைகிறது. இதில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் மற்றும் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்....

வழக்கமாக கூட்டத்தொடரில்தான் சலசலப்புகளும் சர்ச்சைகளும் அரங்கேறும். ஆனால், சற்று வித்தியாசமாக சிறப்பு கூட்டத்தொடர் அறிவிப்பே சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிறப்புக்கூட்டத்தொடர் கூட்டப்படுவதற்கான எவ்வித காரணங்களையும் குறிப்பிடாமல் X வலைதளத்தில்தான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட்டால் 15 நாட்களுக்கு முன் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு கூட்டத்தொடர் நடைபெறுவதே வழக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் எவ்வித நடைமுறைகளையும் மத்திய அரசு பின்பற்றவில்லை என்றும், மணிப்பூர் கலவரம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் உள்ளிட்ட 9 விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.  பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றியே சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பிரகலாத் ஜோஷி சோனியாவுக்கு பதில் கடிதமும் அனுப்பி இருந்தார்.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் என்பது இதுநாள் வரை அதி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே கூட்டப்பட்டது. 2017ம் ஆண்டு ஜூன் 30ம் நாள் ஜி.எஸ்.டி குறித்த விவாதத்திற்கும் , 1997 ம் ஆண்டு 50வது சுதந்திரத்தை கொண்டாடுவது குறித்தும் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த நிலையில் 18ம் தேதி கூட்டப்படும் சிறப்புக்கூட்டத்தில்  ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றும் மசோதா, பொது சிவில் சட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டு வர இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதோடு 1946ம்  ஆண்டு தொடங்கப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகளின் 75ம் ஆண்டு குறித்த அனுபவங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு உறுதி செய்யப்படும் என்றும் தெரிய வருகிறது

கூட்டத்தொடரின் அறிவிப்பே காரசாரமாக இருந்ததால், 5 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் முழுவதும் அனல் பறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.