மிசோரம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதலாவதாக மிசோரத்திலும், சத்தீஸ்கரிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.
அதன்படி, 40 தொகுதிகள் கொண்ட மிசோரத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இதே போல், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு நக்சல்கள் அச்சுறுத்தல் இருப்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், எஞ்சிய 10 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தில் 3 ஆயிரம் போலீசாரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 ஆயிரம் போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.