மற்றவை

மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது...!

Malaimurasu Seithigal TV

மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தோ்தல் தொடங்கியது. 

மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு அண்மையில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மிசோரத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும் மற்றும் சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் கடந்த 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில், 2 ஆயிரத்து 533 வேட்பாளா்கள் களத்தில் உள்ள நிலையில் இன்று ஒரேகட்டமாக  வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், 130 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட மொத்தம் 958 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இந்நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

நக்சலைட்டு தாக்கம் நிறைந்த ராஜிம் மாவட்டத்தின் பிந்த்ரனாவாகர் தொகுதியின் 9 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ராய்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பூபேஷ் பாகல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.