வைரல்

முஸ்லிம் மாணவனை சக மாணவர்களை விட்டு அடிக்கச் சொன்ன ஆசிரியை...! உத்திர பிரதேசத்தில் பள்ளியில் நடந்த அவலம்...!

Malaimurasu Seithigal TV

சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மை சமூகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

இவ்வாறிருக்க உத்திரபிரதேச மாநிலத்தில் முஜாபர் நகர் பகுதியில்  ' திரிப்தா தியாகி',  என்னும் ஒரு  ஆசிரியை தனது வகுப்பில்  ஒரு முஸ்லிம் மாணவனை நிற்க வைத்து சக மாணவர்களை  அழைத்து அந்த  சிறுவனை அடிக்குமாறு கட்டளையிட்டுள்ளார். அதன்படி  வரிசையாக ஒவ்வொரு மாணவரும் வந்து அந்த  மாணவனை கன்னத்தில் அறைந்து செல்கின்றனர். அந்த சிறுவன் அழுதபடியே நின்று கொண்டிருப்பது  போல வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த சிறுவன் சிறுபான்மை  சமூகத்தை சேர்ந்த முஸ்லீம் மாணவன் என்பதால் அவனை இவ்வாறு  வகுப்பறையில் மாணவர்களிடையே  மதபேத உணர்வைத் தூண்டும்  வகையில்  நடத்துவது பார்ப்போரை ஆத்திரமடையச் செய்கிறது. 

இந்நிலையில், இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த சம்பந்தப்பட்ட  ஆசிரியை மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த செயல்  குறித்து விளக்கம் அளித்த ஆசிரியை " அந்த மாணவன் வீட்டுப்பாடம் செய்ய வில்லை என்பதால் தன் சகா மாணவர்களை விட்டு அவனை அடிக்க சொன்னேன் என்றும், தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் பிற மாணவர்களை விட்டு அடிக்க சொன்னதாகவும் தெரிவித்தார். இந்த மாணவனின் பெற்றோர் அவன் மீது கண்டிப்பாக இருக்க சொன்னதால் தான் அவ்வாறு செய்ததாக கூறினார். 

மேலும், தனது அந்த செயலில் எவ்வித மதவெறுப்பும் கிடையாது என்றும், இதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டார். இவ்வாறு அன்றாடம் பள்ளியில் நடக்கும் சிறு சிறு விஷயங்களையும் அரசியலாக்கினால் பின் எவ்வாறு குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது என்றும் வினவினார்.

ஆனால் அந்த வீடியோவில் அந்த ஆசிரியை  மதவெறுப்போடு பேசுவது போன்று பதிவாகியுள்ளது. அது குறித்து கேட்கும்போது, அந்த வீடியோவை அவ்வாறு தவறாக எடிட் செய்துள்ளனர் எனவும், அந்த மாணவனின் உறவினர் அந்த வீடியோவை அவ்வாறு திரித்துக்காட்டியிள்ளனர் என பதிலளித்தார்.

இதையடுத்து  முஜாபர்நகர்  பகுதியின் மாஜிஸ்திரேட் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும்,  இது குறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  

அனைவரும் சமம் என்று உணர்த்த தான் சீருடை அணிந்தவாறு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி படிக்க சொல்வோம். ஆனால் இப்படி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சொல்லித்தர வேண்டிய ஆசிரியையே இப்படி  மத வெறுப்போடு செயல்படுவது வேதனைக்குரிய செயலாகும்.