வைரல்

" நெய்வேலி பிரச்சனையில் முத்தரப்பு பேச்சுவர்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்க..!" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல். 

Malaimurasu Seithigal TV

நெய்வேலி பிரச்சனையில் முத்தரப்பு பேச்சுவர்த்தை நடத்தி அரசு சுமூகத் தீர்வு காணவேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இது  தொடர்பாக இந்திய பொதுவுடைமை  (மார்க்சிஸ்ட்) கட்சியின்   மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-  

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் என்.எல்.சி நிர்வாகம், விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளான நிலம் - வீடு கையகப்படுத்தப்பட்டதற்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை,  மனைப்பட்டா, விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீடு, புறம்போக்கில் வசிப்போருக்கு மாற்றிடம், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களை முறையாக நிறைவேற்றாமல் தொடர்ந்து  விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இது ஒரு விதமான பதட்டத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. என்.எல்.சி. நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் என்ற முறையில் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பொதுவாக, ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் போது நிலம் கையகப்படுத்தல் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டத்தின்படி முறையான நிவாரணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்குவதில்லை. இதே அணுகுமுறையினை நெய்வேலியில் கடைபிடிப்பதன் விளைவாகவே இந்த பதட்டமான சூழ்நிலைக்கும், பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது.

                ஏற்கனவே நிர்வாகத்திடம் ஒப்புவிக்கப்பட்ட  நிலங்களின் ஒரு பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து பயிர் வைப்பது நடந்து வருகிறது. தற்போது அந்த விளைநிலங்களில் இன்னும் 10, 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருக்கின்ற நெற்பயிர்களை விவசாயிகளின் ஒப்புதல் இன்றி அழித்து, நிர்வாகம் வாய்க்கால் வெட்டும் பணியை துவங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.  விவசாயிகளின் எதிர்ப்புக்கு பிறகு பயிர் பாதிப்புக்கு இழப்பீடு தர என்.எல்.சி. நிர்வாகம் ஏற்று கொண்டுள்ளது. மழைக் காலத்தில் மழை நீரால் சுரங்கம் நிரம்பும் ஆபத்தின் பின்னணியில் உரிய முறையில் விவசாயிகளுடன் பேசி சுமூக தீர்வு கண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்து விவசாயிகளையும், கிராம மக்களையும் வஞ்சிப்பதும், காவல்துறையை வைத்து மக்களை மிரட்டி கிராமப்புறங்களிலிருந்து காலி செய்ய எடுக்கும் நிர்வாகத்தின் நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியது.

                என்எல்சி நிறுவனத்தை வெளியேற்றும் கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு நடந்து, ஒரு பக்கம் கல்வீச்சு - மறுபக்கம் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது விரும்பத்தகாதது. என்.எல்.சி. நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் அணுகுமுறையை கண்டிப்பது நியாயமானது. ஆனால், நிறுவனத்தையே வெளியேற சொல்லும் கோரிக்கை ஏற்புடையது அல்ல.

                எனவே, நிலம் கையகப்படுத்தல் மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தல் சட்டத்தின் அடிப்படையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டு விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் நலன்களையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் வகையில் என்எல்சி நிர்வாகம் சுமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது " .

எனக் குறிப்பிட்டுள்ளார்.