மற்றவை

சனாதன ஒழிப்பு பேச்சு குறித்து உதயநிதி விளக்கமளிக்க ஆணை....!

Tamil Selvi Selvakumar

சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பாக உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை நாம் எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் என்று பேசினார். 

இவரது இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில், பல்வேறு தரப்பினர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் என்ன என்பது பற்றி சிபிஐ விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு மீதான விசாரணையில், சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பாக உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து, தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சனாதன சர்ச்சை விவகாரத்தில் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.