அவதூறு வழக்குக்கு எதிராக ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக குஜராத் அரசு 10 நாட்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் உரையாற்றிய ராகுல்காந்தி, அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவதாகக் கூறினார். மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்ததாகக் கூறி, பாஜக நிர்வாகி புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.
இதையும் படிக்க : ”மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து முதலமைச்சர் திட்டமிடுகிறார்” அன்பில் மகேஷ் பேச்சு!
இதனை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கு BR கவாய், பிரசாந்த் குமார் அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், குஜராத் அரசும், புர்னேஷ் மோடியும் 10 நாட்களில் வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்தனர். தொடர்ந்து வழக்கை, ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.