ஐரோப்பா மற்றும் யூரேசியாவில் பரந்த சந்தைகளை அணுக இந்திய நிறுவனங்களுக்கு செர்பியா ஒரு சிறந்த நுழைவாயிலாக மாறும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வுசிக் உடன் இருதரப்பு நல்லுறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக், இந்தியா – செர்பிய தலைநகர் பெல்கிரேட் இடையே நேரடி விமான சேவையை தொடங்குவது, பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசித்ததாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : ரூ.240 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை...நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!
அதனைதொடர்ந்து பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, புதுமை மற்றும் யோசனைகளால் உந்தப்பட்ட அறிவார்ந்த, கடின உழைப்பாளிகளின் நாடு செர்பியா என பெருமிதம் தெரிவித்தார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தகவல் இடைவெளியை நீக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்த திரெளபதி முர்மு, நிலையான திறன்களைப் புரிந்துகொள்வதால் இருதரப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஆதாரங்களைக் கண்டறிய முடியும் என கூறினார். மேலும் செர்பியாவின் முன்னேற்றத்தில் நம்பகமான ஒன்றாக இந்தியா இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக பெல்கிரேடின் அவலா மலையில் உள்ள முதலாம் உலகப்போரில் உயிரிழந்த 'அடையாளம் தெரியாத' ராணுவ வீரரின் நினைவிடத்தில் திரவுபதி முர்மு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.