மற்றவை

பிரதமர் மோடி - அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு...கோரிக்கை வைத்த பிரதமர்!

Tamil Selvi Selvakumar

நாகை - இலங்கை இடையே படகு பயண சேவை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், பிரதமர் மோடி - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளன.

இரண்டுநாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருநாட்டு நல்லுறவுகள் மற்றும் கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து நாகை - இலங்கை இடையேயான படகு பயண சேவை, இலங்கை யு.பி.ஐ பண பரிவர்த்தனை, விமான சேவை, எரிசக்தி தொடர்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து ரணில் விக்ரம சிங்கேவுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஆக்கப்பூர்வமான முறையில் மீண்டு வருவதாக குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே விமான போக்குவரத்தை மேம்படுத்த முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.

தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று சமத்துவம், நீதியை இலங்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவின் வளர்ச்சி, அண்டை நாடுகளுக்கும், இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டார்.