மற்றவை

3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி...!

Tamil Selvi Selvakumar

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பிதழின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்லும் அவர், அங்கு ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்கிறார். 

பின்னர், அங்கிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு செல்லும் மோடி, நாளை இரவு அதிபர் ஜோ பைடன் தம்பதியர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் சிறப்பு இரவு விருந்தில் பங்கேற்கிறார். இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் பங்கேற்க உள்ளனர்.

அதனை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் 22-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தொடர்ந்து 23-ம் தேதி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசுகிறார். 

மேலும் அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர், இருதரப்பு பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் தொழில், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொலைத்தொடர்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று மத்திய வெளியுறவு துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இப்பயணத்தின்போது, பாதுகாப்பு துறை சார்ந்த விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 24, 25-ம் தேதிகளில் பிரதமர் மோடி எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.