மற்றவை

கேரளா குண்டு வெடிப்பு: சரணடைந்த நபரிடம் NSG விசாரணை!

Tamil Selvi Selvakumar

கேரள குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று சரணடைந்த டொமினிக் மார்ட்டினிடம் தேசிய பாதுகாப்புப்படை விசாரணை மேற்கொண்டனர்.

கொச்சி அருகே 2 ஆயிரம் பேர் கூடியிருந்த கிறித்துவ கன்வென்ஷன் சென்டரில் எதிர்பாராத நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. மூன்று குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமியும், மற்றொரு பெண்ணும் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று கொடக்காரா காவல்நிலையத்தில் சரணடைந்த டொமினிக் என்பவர், தேசத்துரோக எண்ணத்துடன் ஒருதலைப்பட்சமாக சபையினர் நடந்துகொண்டதால் அதன் உறுப்பினரான, தானே குண்டுவைத்ததாகக் கூறினார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், 3 ஆயிரம் ரூபாய் செலவிட்டு யூ-ட்யூப் பார்த்து குண்டு தயாரித்தது தெரியவந்தது.

இச்சம்பவத்திற்கு பயங்கரவாத நோக்கம் காரணமா? என்ற கோணத்தில் அவரிடம் தேசிய பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தேசியப் புலனாய்வு முகமையும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக தமிழ்நாடு - கேரளா எல்லைகளில் 10க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஈடுபட்டார்.

தொடர்ந்து கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், காயமடைந்த 17 பேரில், 12 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், 60 சதவீத தீக்காயத்துடன் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் கூறினார்.