மற்றவை

கன்னியாகுமரி: தூண்டில் வளைவு நீளத்தை அதிகரிக்க கோரி மீனவர்கள் போராட்டம்!

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவு பணியின் நீளத்தை அதிகரிக்க கோரி பணியை தடுத்து நிறுத்தி மீனவர்கள் போராட்டம்.

கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் இருந்து தினமும் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடல் அலையின் சீற்றம் காரணமாக நாட்டு படகுகள் கவிழ்ந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் இழப்புகளும் தொடர்ந்து வருவதால் கன்னியாகுமரி, பெரிய நாயகி தெரு கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்ததன் பலனாக அந்த பகுதியில் 211 மீட்டர் நீளத்திற்கு தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பருவநிலை மாற்றம் காரணமாக அந்த பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் தற்போது நடைபெற்று வரும் தூண்டில் வளைவு பாலப் பணியினை மேலும் 311 மீட்டர் நீளத்திற்கு விரிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள் அங்கு நடைபெற்று வந்த பணியினை தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவல் இருந்து வந்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் நவீன் தலைமையிலான போலீசார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

மேலும் தமிழக அரசு உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் மறுக்கப்படும் பட்சத்தில் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்களின் இந்த போராட்டத்தினால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டது.