மற்றவை

சந்திரயான் 3 விண்கலம் எடுத்து அனுப்பிய...நிலவின் 4 புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது!

Malaimurasu Seithigal TV

சந்திரயான் 3 விண்கலம் எடுத்து அனுப்பிய நிலவின் 4 புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சென்ற சந்திரயான் விண்கலம், லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட காணொலியை இஸ்ரோ அண்மையில் வெளியிட்டிருந்தது. 

பின்னர், விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, நிலவில் தரையிறக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. வரும் 23-ஆம் தேதி மாலை 6 மணி 4 நிமிடங்களுக்கு நிலவில் தடம் பதிக்கும் என இஸ்ரோ அறிவித்தது. 

அதன்படி, நிலவுக்கும் லேண்டருக்குமான இடைவெளியை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. அப்போது, பாறைகள், ஆழமான குழிகள் இல்லாத பாதுகாப்பான பகுதியை தேர்வு செய்து தரையிறங்கும் வகையில் லேண்டர் உருவாக்கப்பட்டது. 

இந்த வரலாற்று நிகழ்வை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி உள்ள நிலையில், தற்போது எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட 4 புகைப் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.