மற்றவை

வி பி சிங்க்கு சிலை...! திருமாவளவன் வரவேற்பு...!! 

Malaimurasu Seithigal TV

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் இந்திய பிரதமர் வி பி சிங்க்கு சிலை வைப்பது தொடர்பாக அறிவித்தது  வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக நீதிக் காவலர் வி பி சிங்க்கு தமிழகத்தில் திரு உருவ சிலை திறப்பதை வரவேற்பதாக கூறினார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  காதல் திருமணம் செய்த மகன் தந்தையால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக வருகின்ற 22 ஆம் தேதி  கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும்  தெரிவித்தார். 

அதை தொடர்ந்து, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத்தர தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர்  அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரவேற்பதாகவும்  சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல் எனவும் கருத்து தெரிவித்தார். 

மேலும், திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணியாக இருப்பதாக தெரிவித்த அவர்  இந்த கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது எனவும் கூறினார். மேலும், திமுக விற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே உள்ள நட்புணர்வு, கொள்கை சார்ந்த உறவு என்றும் தேர்தல் களத்தில் மட்டும் அல்லாது சமூக நீதிக்கான களத்திலும் தொடர்ந்து இணைந்து பயணிக்க கூடிய வலுவை பெற்று இருக்கக் கூடிய கூட்டணி ஆகும் எனக்கூறி தொடர்ந்து  திமுக கூட்டணியில்  பயணம் செய்து கொண்டு இருப்பதாக உறுதியுடன் தெரிவித்தார். 

கர்நாடகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவரே தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும் எனக்கூறிய அவர் இதனை தமிழக முதல்வர் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.