மற்றவை

ஒருவர் தலையில் தலைகீழாக இன்னொருவர்...! 53 வினாடிகளில் 100 படிகள் ஏறி கின்னஸ் சாதனை

 53 வினாடிகளில் 100 படிக்கட்டுகள் ஏறி கின்னஸ் சாதனை...

Malaimurasu Seithigal TV

ஒருவர் தலை மீது இன்னொருவர் தலைக் கீழாக தன்னை நிறுத்திக்கொள்ள, இருவரும் சேர்ந்து  100 படிகட்டுகளை கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப். உடன்பிறந்த சகோதரர்கள் ஆகிய இருவரும் சிறு வயது முதலே சர்க்கஸ் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக விளங்கி வருகின்றனர்.

இதுவரை பல வித ஸ்டண்ட் சாகசங்களை புரிந்துள்ள சகோதரர்கள் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக புதிய கின்னஸ் சாதனை ஒன்றை புரிந்துள்ளனர்.

அதாவது, ஒரு சகோதரர் தலையில் மற்றொரு சகோதரர் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு ஏறினார். பின்னர் கீழே இருந்த சகோதரர்  53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனை கடந்த 23 ஆம் தேதியன்று ஸ்பெயினின் ஜிரோனாவில் உள்ள செயிண்ட் மேரிஸ் கதீட்ரலுக்கு வெளியே இருந்த படிகளில் இவர்கள் தங்கள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கின்னஸ் சாதனை குறித்து சகோதரர்களிடம் கேள்வி எழுப்பியபோது, இது குறித்து ஜியாங் குவோக் கோ பதிலளித்தார். நாங்கள் இருவரும் சுமார் 15 ஆண்டுகளாகவே இந்த சாதனையை நிகழ்த்த ஒத்திகை பார்த்து வருகிறோம். எங்களின் கடுமையான  பயிற்சியின் போது ஏராளமான விபத்துகளும், காயங்களும் நிகழ்ந்துள்ளது. ஆனால், அந்த கடின உழைப்பிற்காக இன்று நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். 

ஏனென்றால், கடின உழைப்புக்கு பலனாக இன்று 53 வினாடிகளில் 100 படிகளை ஏறிவிட்டோம் இதை நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த நாளை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். 

இதேபோன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள்  90 படிகளை 52 வினாடிகளில் ஏறி இருந்தோம். இப்போது அதை 100 படிகளாக மாற்றியுள்ளோம். இது எங்களின் பெரிய முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என சகோதரர்கள் தெரிவித்தனர்.