சுற்றுச்சூழல்

" தக்காளியை ரோட்டில் கொட்டினோமே அப்போது ஏன் ரேஷன் கடைகளில் விற்கவில்லை" - விவசாயிகள் காட்டம்.

Malaimurasu Seithigal TV

3 ரூபாய்க்கு விற்பனையான தக்காளியை ரோட்டில் கொட்டினோமே அப்போது ஏன் ரேஷன் கடைகளில் விற்கவில்லை... தமிழக அரசுக்கு உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் ஈஸ்வரன் பரபரப்பு கேள்வி...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையம் பகுதியில் 1972 ஆம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குண்டடி பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்வேறு விவசாய கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று அவர்களது நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
 
அதனை தொடர்ந்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:-
" 1972 ஆம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டத்தில் துப்பாக்கி குண்டடி பட்டு உயிரிழந்த சுப்பையன் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோர் விவசாய போராட்டத்தில் உயரிழந்தனர். எனவே அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து இன்றைய தக்காளி விலை 130 ரூபாய் என்ற நிலை உள்ளதை அறிந்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய முன் வரும் தமிழக அரசு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 3 ரூபாய்க்கு விற்ற  நாட்களில் தக்காளிகளை ரோட்டில் கொட்டி போராட்டம் செய்தோமே அப்போது ஏன் செவி சாய்க்கவில்லை? “ என்ற கேள்வியை முன் வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி,பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜி.கே நாகராஜ்,அனைத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.