சுற்றுச்சூழல்

MBA படித்துவிட்டு பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரிப்பு..! அசத்தும் விவசாயி..!

Malaimurasu Seithigal TV

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி ராசியங்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், எம்.பி.ஏ. பட்டம் பெற்று, தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். 

"உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது" என்பார்கள். உண்மைதான். மழையிலும், வெயிலிலும் பாடுபட்டு பயிர் செய்யும் விவசாயிகளை விட, இடைத் தரகர்களே அதிகம் சம்பாதிக்கின்றனர் என்பதே கசப்பான உண்மை. 

இதனை மாற்றி விவசாயிகளும் நல்ல வருவாய் ஈட்ட வேண்டும், அதே நேரம் பொது மக்களுக்கு நல்ல தரமான, ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று முடிவெடுத்த விவசாயி சரவணன், இதற்காக கையில் எடுத்ததுதான் இயற்கை விவசாயம்.

தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் தென்னையும், 10 ஏக்கரில் எள் மற்றும் கடலையை, இயற்கை முறையில் சாகுபடி செய்தார். 

இந்த பொருட்களை அப்படியே விற்பனை செய்தால் குறைந்த வருவாய் மட்டுமே ஈட்ட முடியும். இதனை எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என்று எண்ணிய சரவணன். அதனையும் இயற்கை முறையில் பாரம்பரிய முறையில் செய்ய முடிவெடுத்தார். 

இதற்காக, இயந்திரங்களை தவிர்த்து, வாகை மரத்தைக் கொண்டு,  பாரம்பரிய மாட்டுக் கல் செக்கு அமைத்து, காங்கேயம் காளைகளைக் கொண்டு, செக்கை இயக்கி, சுத்தமான எண்ணெய் தயாரிக்கிறார். 

எண்ணெய் சூடாகாமல் உயிர் சத்துக்கள் பாதுகாக்கப்படுவதால், இந்த எண்ணெயில் சமைப்பதன் மூலம், ஆரோக்கியத்துடன், நல்ல ருசியும் கிடைப்பதால்  பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.  

அத்துடன் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து மாதம் 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார். 

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செ ய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதற்கு இந்த  இயற்கை விவசாயி சரவணனே சிறந்த உதாரணம்.