சுற்றுச்சூழல்

10 புலிகள் இறந்த விவகாரம்; விசாரணைக் குழு அமைக்க ஆம் ஆத்மி கோரிக்கை!

Malaimurasu Seithigal TV

நீலகிரியில் 10 புலிகள் இறந்தது தொடர்பாகப் புலன் விசாரணைக் குழு அமைத்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என தமிழக ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சங்கர் பேட்டியளித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில், நீலகிரியில் மாவட்டத்தில் இறந்த 10 புலிகள் குறித்து வனத்துறையின் அறிக்கை மற்றும் செய்தி வெளியீடு குறித்த வெள்ளை அறிக்கை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் எனவும் புலிகளின் இறப்பு குறித்து புலன் விசாரணைக் குழு ஒன்றினை ஏற்படுத்தக் கோரியும் மனு  ஒன்றைத் தமிழ்நாடு வனத்துறை முதன்மைச் செயலாளரைச் சந்தித்து வழங்கினர்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சங்கர் கூறியதாவது, "நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் 10 புலிகள் இறந்தது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் 
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.  அந்த அறிக்கை சந்தேகத்திற்குரியதாக இருந்தது. புலிகள் இறந்ததற்கு உட்பூசல் காரணம் தொடர்பாக இருந்திருக்கக் கூடும், உணவு கொடுக்காமல் நீண்ட நேரம் நடந்து சென்றதால் குட்டிப்புலிகள் இறந்து இருக்கலாம் என்று அறிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இந்த செய்தி வெளியே வருவதற்குக் காரணமே, அங்கு வசித்த ஒருவர் மாட்டுக் கறியில் விசம் தடவி ஒரு புலியைக் கொன்றது தான் இதன் காரணமாக அவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது தான் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்குப் பிறகு மொத்தமாக 10 புலிகள் இறந்துள்ளது. அதில் 3 புலிகள், குட்டி புலிகள் எனவும் தெரியவந்ததுள்ளது. அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளது எனத்‌ தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புலிகள் இறந்து விட்டால் மூன்று கிலோமீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டர் வரை தானாகவே காடுகள் தானாகவே அழிந்து போகும். இதுவரை 10 புலிகள் இறந்துள்ளது இது தொடர்பாகப் புலன் விசாரணைக் குழு அமைத்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். காட்டில் என்ன நடந்தது என்று விசாரிக்க வனத்துறை தனி செயலாளரிடம் மனு கொடுத்து உள்ளோம். அவரும் விசாரணைக் குழு அமைக்க இருப்பதாகக் கூறிள்ளதாக தெரிவித்தார்.

வனவிலங்குகளுக்கு உணவு, நீர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவை இல்லதால் தான் மனிதர்கள் வாழும் இடத்தை நோக்கு விலங்குகள் வருகின்றன. வனவிலங்குகளை வேட்டையாடுவது என்பது தற்பொழுது இயல்பாகி விட்டது. புலித்தோல், புலி நகம் போன்றவற்றை சில விசயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றார்.