கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

”பள்ளிகளில் நிதியுதவி பெற இனி ’நம்ம ஸ்கூல் பவுன்டேசன்’ அனுமதி பெற வேண்டும்” - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.. -

Malaimurasu Seithigal TV

பள்ளிகளில் நிதியுதவி பெற இனி ’நம்ம ஸ்கூல் பவுன்டேசன்’ அனுமதி பெற வேண்டும் என்பதை பள்ளிகளுக்கு வலியுறுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் அரசு திட்டங்கள் மட்டுமின்றி தனிநபர், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக நிதியுதவி பெற்று சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இதில் முறைகேடுகள் நடப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஆகியவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக நிதியுதவி பெறப்பட்டு மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு தனிநபர், தனியார் நிறுவனங்கள்,  தொண்டு நிறுவனங்கள் மூலமாக பொருட்கள் மற்றும் நிதியுதவி அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதில், மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது, இலவசமாக நூல்கள், இதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் பொழுது, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் மூலமாக அனுமதி பெற்ற பிறகே மேற்கொள்ளுமாறு பள்ளிகளை அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

’நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ தலைவராக டிவிஎஸ் வேணு சீனிவாசன் நியமிக்கப்பட்ட போதே ஆசிரியர் சங்கங்கள், கல்வி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.