கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்; 16-ம் தேதி வெளியீடு!

Malaimurasu Seithigal TV

மருத்துவக்கல்விக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வரும் 16-ந்தேதி வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
சேலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு மருத்துவ மாணவர் கலந்தாய்வு முன்கூட்டியே நடத்துவதால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் வராது. 15 சதவீத இடங்களுக்கு மட்டுமே மத்திய அரசு கலந்தாய்வை நடத்துகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்தும். தற்போது வரை மருத்துவக் கல்வி பயில 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நாளை வரை மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வரும் 16-ந்தேதி வெளியிடப்படும். மத்திய அரசு அகில இந்திய கலந்தாய்வு தேதி அறிவித்தவுடன் தமிழக கலந்தாய்விற்கான தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், பழமை வாய்ந்த சேலம் மருத்துவக் கல்லூரியில் தற்போது 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும். மேலும், தமிழகத்தில் திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்காகவும், வரும் 14 மற்றும் 15-ந்தேதிகளில் டேராடூனில் நடக்கும் சுகாதார அமைச்சர்களுக்கான மாநாட்டின் போது மத்திய அமைச்சரிடம் கோரிக்கைகள் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
 
மத்திய குழுவின் ஆய்வின் போது தருமபுரி, ஸ்டான்லி மற்றும் திருச்சி மருத்துவமனைகளில் தெரிவிக்கப்பட்ட குறைகள் முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான அங்கீக்காரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
திரைப்படங்களில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரைப்படங்களின் தாக்கம் இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. இதனை உணர்ந்து திரை நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் நன்மையான கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும் என பதிலளித்தார். பேட்டியின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.