தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 1-ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், வருகிற 30-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 1-ம் தேதி புயலாக வலுப்பெறும் போது அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.