ஆந்திரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவியாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலும், விசாகப்பட்டினம் - பால்சா விரைவு ரயிலும் கண்டகப்பள்ளி அருகே ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதனால் இரு ரயில்களின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தால், ரயிலை இயக்கிய லோகோ பைலட், ரயில்வே காவலர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதனால் அந்த வழித்தடத்தில் 33 ரயில்கள் வழிமாற்றப்பட்டுள்ள நிலையில், சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்துக்கு மனிதத் தவறே காரணம் எனவும், விபத்து குறித்து ரயில்வே தொழில்நுட்பக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் 10 லட்ச ரூபாயும், பிரதமர் மோடியின் அறிவிப்பின்பேரில் 2 லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகமும் 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்ததோடு, படுகாயமடைந்தோருக்கு இரண்டரை லட்ச ரூபாய் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.