தெலுங்கு படமான உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமை குறித்து நடிகர் விஜய்சேதுபதியின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான 'உப்பெனா' திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தனது கதை திருடப்பட்டு ‘உப்பெனா’ படம் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த எஸ்.யு.டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தான் உருவாக்கிய ‘உலகமகன்’ என்ற கதையை தர்மபுரியை சேர்ந்த சம்பத் என்ற உதவி இயக்குனரிடம் கடந்த 2015ஆம் ஆண்டு தெரிவித்து இருந்ததாகவும், சம்பத்துக்கு அனுப்பிய உலகமகன் படைப்பு சிலரால் திருடப்பட்டு, தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
எனவே உப்பெனா படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
டல்ஹவுசி பிரபு தொடர்ந்த வழக்கு குறித்து விஜய் சேதுபதி பட நிறுவனம், தெலுங்கில் படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குனர் புஜ்ஜி பாபு சனா ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் சேதுபதி சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தான் வாங்கவில்லை என்றும், அதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். பின்னர் விஜய்சேதுபதிக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் வாதிட்டார். தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் .