பொழுதுபோக்கு

சோனு சூட் வரி ஏய்ப்பு செய்தாரா..? வருமான வரித்துறை தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சி...

பிரபல நடிகர் சோனு சூட் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது.

Malaimurasu Seithigal TV

தமிழ், இந்தி என பல மொழிகளில் வில்லன் வேடத்தில் நடித்த சோனு சூட், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது செய்த பல்வேறு உதவிகளால் பொதுமக்கள் மத்தியில் இன்று வரை ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார். இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் திட்டத்துக்கு தூதுவராக, சமீபத்தில் சோனு சூட்டை டெல்லி மாநில அரசு நியமித்தது.

இதனை தொடர்ந்து சோனு சூட்டுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை சோனு சூட் மீறியதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதாவது பெரிய அளவிலான வெளிநாட்டு நிதிகளை பெற்று, அதனை வேறு வழிகளில் செலவிடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மற்றொரு இடத்தில் நடிகர் சோனு சூட் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்ததாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். போலி கடன் ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பல ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ள வருமான வரித்துறையினர், சோனு சூட்டின் தொண்டு நிறுவன கணக்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சோனு சூட் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து, கருத்து தெரிவித்துள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சோனு சூட் உடன் லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனை இருப்பதாக கூறியுள்ளார்.