பொழுதுபோக்கு

ஊட்டியில் புதிய படகு இல்லம்; அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு!

Malaimurasu Seithigal TV

உதகை அருகே கிளன்மார்கன் அணையில் புதிய சொகுசு  படகு இல்லம் அமைக்க சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் நேற்று நேரில் ஆய்வு செய்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற சுற்றுலா நகரமான உதகைக்கு ஆண்டுதோறும் 25 முதல் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற சுற்றுலா ஸ்தலங்களை மட்டுமே கண்டு ரசித்து செல்கின்றனர். வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு புதிதாக அதிநவீன பார்க்கிங் வசதிகளுடன் புதிய படகு இல்லங்கள்,  பூங்காக்களை சுற்றுலாத்துறை மூலம் அமைத்திட சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி உதகையிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள கிளன்மார்கன் அணையில் அதிநவீன வசதிகளுடன், சொகுசு படகு சேவையை அறிமுகப்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அரசு உயர் அதிகாரிகளுடன் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். விரைவில் இப்பகுதியில் புதிதாக சொகுசு படகு சேவையை சுற்றுலாத்துறை மூலம் அமைக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.