பொழுதுபோக்கு

தி காஷ்மீர் ஃபைல்ஸை கிழித்தெறிந்த நடாவ் லாபிட்.. சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த அவமானகர நிகழ்வு..!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வைத் தூண்டுகிறது, இது ஒரு இழிவான திரைப்படம் - சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லாபிட் பேச்சு

Malaimurasu Seithigal TV

சர்வதேச திரைப்பட விழா

கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற  53வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்‘ திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படத்தை பற்றி பேசிய அவ்விழாவின் நடுவர், இது பிரச்சாரம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நாகரிகமற்ற திரைப்படம் என்று விமர்சித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவிக்கு விருது

கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய கோவா திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தமாக 9 நாட்கள் நடைபெற்ற இத்திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவில் இந்த ஆண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.

ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்

இந்த விழாவில் ஸ்பானிஷ் மொழி திரைப்படமான 'ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்' சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், "நோ எண்ட்" படத்தின் இயக்குநர் நடேர் சேவருக்கு சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருது வழங்கப்பட்டது. அதே படத்தில் நடித்த வாகித் மொபாசெரிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

தி காஷ்மீர் பைல்ஸ்

கோவாவில் நடைபெற்ற இத்திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டது. இந்நிலையில் "தி காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படம் குறித்து திரைப்பட விழாவின் கடைசி நாளான நேற்று பேசிய தேர்வுக்குழு தலைவர் நடாவ் லாபிட், இப்படத்தின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தேர்வுக்குழு தலைவர் அதிருப்தி

தொடர்ந்து பேசிய நடாவ் லாபிட், இத்திரைப்படம் வெறுப்புணர்வைத் தூண்டுகிறது, இது ஒரு இழிவான திரைப்படம். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை என்று அவர் காட்டமாக தெரிவித்தார். மேலும், பெரு மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தத் திரைப்படம் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் தருகிறது. இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தேர்வுக்குழு தலைவர் நடாவ் லாபிட் பேசியுள்ளார்.