பொழுதுபோக்கு

மாமன்னன் இசை வெளியீட்டு விழா...! 

Tamil Selvi Selvakumar

”மாமன்னன்” படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள "மாமன்னன்" திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் (01.06.2023) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், கவின், விஜய் ஆண்டனி, சூரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,  சந்தோஷ் நாராயணன், போனிகபூர், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாண்டிராஜ், ஏஆர் முருகதாஸ், பா ரஞ்சித், ஹெச் வினோத், விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இதுவரை காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக பார்த்த நடிகர் வடிவேலு, இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்லுக் போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில், வடிவேலு பாடிய ராசக்கண்ணு, ஏஆர் ரஹ்மான் குரலில் ஜிகுஜிகு ரயில் பாடல்கள் தவிர, 'கொடி பறக்குற காலம்', 'நெஞ்சமே நெஞ்சமே', 'உச்சந்தல', 'மன்னா மாமன்னா', 'வீரனே' ஆகிய பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தெருக்குரல் அறிவு எழுதி தானே எழுதி பாடியுள்ள மன்னா மாமன்னா பாடலும், ஏஆர் ரஹ்மானின் மகன் ஏஆர் அமீன் பாடிய வீரனே பாடலும் அதிக கவனம் ஈர்த்துள்ளது.  விஜய் ஜேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய நெஞ்சமே நெஞ்சமே பாடல்  ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் உள்ளது. ஆகமொத்தம் 7 பாடல்களுமே ரசிகர்களுக்கான இசை விருப்பத்திற்கு ஏற்றதாக உள்ளது.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் உதயநிதி, “மாமன்னன் வடிவேல் அண்ணன் தான்; வடிவேலு அண்ணன் இல்லையே மாமன்னன் இல்லை” என்று கூறியவர், இப்போதைக்கு இதுதான் என் கடைசி படம் ஒருவேளை மூன்று வருடங்களுக்குப் பிறகு நடித்தால் மாரி செல்வராஜ் படத்தில் தான் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தலைமுறையில் நாம் நிற்கிறோம். என்னை பொறுத்தவரை இது என்னுடைய அரசியலும்தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்கு முக்கிய காரணம் நடிகர்கள் தேர்வு என கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “நான் எந்த படம் எடுத்தாலும் அதில் சமூக நீதிக்கான அரசியல் கண்டிப்பாக இடம்பெறும். அதேபோல தான் ‘மாமன்னன்’ வெளியான பிறகு பெரிய அதிர்வலைகளை உருவாக்கும். புதிய வடிவேலுவை இந்தப்படத்தில் எல்லோரும் பார்ப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.