உலகம் முழுவதும் மரம் நடுவதை குறிக்கோளாக கொள்வோம் என பாடகி ஏ.ஆர்.ரீஹனா சென்னையில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
உலக பூமி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகள் மற்றும் மண்டலங்களில் உள்ள பூங்காகளிலும் தொண்டு நிறுவனம் மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெல்லிங்டன் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் சுகம் நல அறக்கட்டளை இணைந்து நடத்திய 'மரம் நடும் ஆண்டு' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரீஹனா, பல்வேறு தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை மாநகராட்சியை பசுமையாக்கும் வகையில் அனைத்து வார்டுகள் மற்றும் மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் மரங்களை நடுவதாகவும், 1 மில்லியன் மரக்கன்றுகள் நடுவதை குறிக்கோளாக இந்நிகழ்ச்சி கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் அதன் தொடக்கமாக 50 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.
அப்போது மேடையில் பேசிய ஏ.ஆர்.ரீஹனா, சென்னையில் மட்டும் மரம் நடுவது நம் குறிக்கோளாக இல்லாமல் உலகம் முழுவதும் நட வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசுகையில், பாட்டில்களில் எல்லாம் தண்ணீர் வாங்குவாங்கர்களா என நம்பி இருந்த அவரே இன்று பெட்டி பெட்டியாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகி உள்ளதாக கூறிய அவர் பீமா பம்போ எனும் தனது தோட்டத்தில் 800 மரங்கள் நட்டு உள்ளதாக தெரிவித்தார்.