பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயராமின் கதாபாத்திரம் இது தானா...?

Malaimurasu Seithigal TV

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கான அப்டேட்ஸை படக்குழு அதிகாரபூர்வமாக வழங்கி வருகின்றன. அந்த வகையில், தற்போது படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதற்கு நடிகர் கார்த்தி ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள ஒரு வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம். 

லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை நேரு உல் விளையாட்டு அரங்கில் நடை பெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கோலிவுட்டின் இரு பெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனை லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் கதாபாத்திரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில், நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள படக்குழு,  இந்த நீதிமன்ற உளவாளியின் காதுகளிலிருந்து எதுவும் தப்பவில்லை என்றும் ஆழ்வார்க்கடியான் நம்பி ஆக ஜெயராம் என்றும் பதிவிட்டுள்ளது.

இதற்கு நடிகர் கார்த்தி கமெண்ட் செய்துள்ளார். "  ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை.. ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா..." என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மகாபாரதத்திற்கு எப்படி சகுனியோ, அதே போன்று தான் பொன்னியின் செல்வனுக்கு நம்பி. ஒரு வில்லன் கதாபாத்திரத்தை தூண்டி விட ஒரு சகுனி தேவை. அது போல தான் இந்த நம்பி கதாபாத்திரம். நம்பியால் வந்தியத்தேவன் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். அந்த வந்தியத்தேவன் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரம். அதனால் தான் நம்பி குறித்து வந்தியத்தேவன் இது போன்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.