பொழுதுபோக்கு

மொழியில் சிக்கிய குஷ்பு...தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் சினிமா பிரபலங்கள்...!

Malaimurasu Seithigal TV

இதுவரையில் நான் எந்த ட்விட்டரையும் நீக்கியதில்லை, பயந்து பின் வாங்கக்கூடிய ஆள் குஷ்பு கிடையாது ஆவேசமாக பேசிய குஷ்பு...

அண்மை காலமாகவே, சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சையில் சிக்கி வருவது தொடர்ந்து வருகிறது. நடிகர் சிவகார்த்திக்கேயன் - இமான், அமீர் - ஞானவேல் பிரச்சினையை தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் - திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் பெரியளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகை குஷ்பு உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் நடிகை குஷ்பு, அடுத்தகட்ட நடவடிக்கையாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். நடிகை திரிஷாவிற்காக பொங்கி எழும் நடிகை குஷ்பு, மணிப்பூரில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட போது நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று சோசியல் மீடியாவில் குஷ்புவிற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, மோசமான வார்த்தைகளால் பதிவிட்டிருந்தனர். 

இதற்கு தனது எக்ஸ் தளம் மூலம் பதிலளித்திருந்த நடிகை குஷ்பு, உங்களைப் போல ”சேரி” மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கவனித்து பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், குஷ்புவின் இந்த பதிலுக்கு பிறகு தான் சாதாரண பிரச்சினையானது பூகம்பமாக வெடிக்க தொடங்கியது. என்னென்னா...குஷ்பு அந்த பதிவில், சேரி ,மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, நடிகையும், தேசிய மகளிரணி உறுப்பினருமான குஷ்பு இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல், அவரது உருவபொம்மையை எரித்து வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர்.

இதற்கிடையில், மீண்டும் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்திருந்த குஷ்பு, நான் கிண்டலுடன் பதிவிட்ட பதிவு அது என்றும், அதோடு சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம் என்றும், நான் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன் என்றும், நான் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்க கூடியவள் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, நான் ஊர்ல இல்லாத நேரத்தில் எனது வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர். ஆனால், காவல்துறையினர் தக்க சமயத்தில் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரசாங்க வார்த்தையிலேயே சேரி என்கிற வார்த்தை வரும் என்று கூறியவர், சேரி வார்த்தை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். 

அத்துடன், வேளச்சேரி, செம்மஞ்சேரி என்ற பெயர்களில் கூடத்தான் சேரி உள்ளதாக குறிப்பிட்டவர், சேரி என்பது பிரஞ்சு மொழியில் அழகு என்பது தான் என்னுடைய கருத்து எனவும் தெரிவித்தார். மேலும் தகாத வார்த்தை நான் பயன்படுத்துவதில்லை எனவும், யாரையும் தவறாக பேசுவதில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், திமுகவை குறிப்பிட்டு நான் எழுதிய பதிவிற்கு காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியவர், இதுவரையில் நான் எந்த ட்விட்டரையும் நீக்கியதில்லை, பயந்து பின் வாங்கக்கூடிய ஆள் குஷ்பு கிடையாது என்றும் ஆவேசமாக பேசினார். 

இப்படி நாம் பார்த்து ரசிக்கும் சினிமா பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், நெட்டிசன்கள் சிலர் சினிமாகாரங்கன்னா சர்ச்சையில் சிக்குவது புதுசா என்ன? இதெல்லாம் அரசியல்( சினிமா)ல சாதரணமப்பா! என்று சோசியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.