பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கௌசிக் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. கடந்த 1956ம் ஆண்டு பிறந்த சதீஷ் கௌசிக், பாலிவுட்டில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம்வந்தார். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்காக இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
ரூப் கி ராணி சோரன் கா ராஜா என்கிற பாலிவுட் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சதீஷ் கெளசிக். இப்படத்தில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் பாலா - விக்ரம் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற சேது படத்தை இந்தியில் தேரே நாம் என்கிற பெயரில் ரீமேக் செய்திருந்தார் சதீஷ் கெளசிக். சல்மான் கான் மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான இப்படம் இந்தியிலும் வெற்றிவாகை சூடியது.
இந்தியில் மொத்தம் 13 படங்களை இயக்கியுள்ள சதீஷ் கெளசிக், 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் நடித்து அசத்தி இருக்கிறார். சதீஷ் கெளசிக்கின் மரணம் பாலிவுட் பிரபலங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சதீஷ் கெளசிக்கின் நெருங்கிய நண்பரும் பாலிவுட் நடிகருமான அனுபம் கெர் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது : “மரணம் இந்த உலகின் இறுதி உண்மை என்பதை நான் அறிவேன். ஆனால் எனது சிறந்த நண்பன் சதீஷ் கௌசிக்கை பற்றி இப்படி எழுதுவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. 45 வருட நட்புக்கு இப்படி ஒரு திடீர் முற்றுப்புள்ளி. ஓம் சாந்தி!” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் சதீஷ் கெளசிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். கங்கனா இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் எமர்ஜென்சி படத்தில் சதீஷ் கெளசிக் நடித்து இருக்கிறார். எமர்ஜென்சியில் அவரை இயக்குவது தனது மிகவும் பிடித்திருந்ததாக கங்கனா தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிக்க: வடசென்னை பாகம் 2.... அறிவிப்பை வெளியிட்ட வெற்றிமாறன்!!!