சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரை துறையில் பணியாற்றும் லைட் மேன்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்காக நிதி திரட்டும் வகையிலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (அன்பின் சிறகுகள் - Wing of Love) என்ற பெயரில் சினிமா பாடல்கள் அல்லாது 'Sufi' பாடல்கள் மட்டும் அரங்கேற உள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் 19 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனமும் இணைந்துள்ளது.
இந்நிகழ்ச்சி டாக்டர் எம். ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதால் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் மெட்ரோ பயணிகள் மற்றும் ரசிகர்களின் வசதிக்காக 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் அன்று மட்டும் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள், மார்ச் 19 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவை டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து முனையங்களிலிருந்தும் (விமான நிலைய மெட்ரோ, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ, டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ) கடைசி இரயில் நள்ளிரவு 12:00 மணிக்கு புறப்படும்.
கடந்த ஜனவரி மாதம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் பணியின்போது லைட் மேன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விழுப்புரம் மாவட்டம்....கல்லூரி மாணவி வெட்டிக் கொலை...!!